Saturday, January 31, 2009

வளவு இராமகி அவர்களுக்கு ஒரு எதிர்வினை

புலிகளை அரக்கராய்க் காட்டும் போக்கு பதிவுக்கு எதிர்வினை
--

ஐயா,
இந்த எதிர்கருத்தை அனுமதிப்பீர்களா என்று தெரியாது.
இருப்பினும் என் கருத்தை சொல்கிறேன்.
”சின்னஞ் சிறுவர், ஆடவர், பெண்டிர் மடியில் வெடி குண்டுகளைக் கட்டிக் கொண்டு, கழுத்தில் சைனைடு வில்லை மாலை சூடிக் கொண்டு ஆயிரக் கணக்கான ஏழை எளியவரைக் கவசச் சுவராகக் கட்டி வைத்துப் போர் புரிவதா அறப்போர் ?”
இந்த கருத்தை எழுதியவர் சரியாகவே குறித்திருக்கிறார்.
நம் நாட்டில் மட்டுமல்ல, உலகத்தில் உள்ள அனைத்து பழங்குடி சமுதாயங்களும் வன்முறை போர்களை கொண்ட சமூகங்கள்தான். எல்லா பழங்குடியினரும் மற்ற பழங்குடிகளோடு போர் புரிகிறார்கள். பழங்குடி சமுதாயத்திலிருந்து வந்த நாமும் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருப்பது அதிசயமானதல்ல.
ஆனால், உலகத்தில் உள்ள எந்த பழங்குடியைவேண்டுமானாலும் எடுத்து பாருங்கள். பெண்கள், சிறுவர்களை போரில் கொல்பவர்களையும், பெண்கள் சிறுவர்களை போர்களில் உபயோகப்படுத்துபவர்களையும் பேடிகள் என்று சொல்வதை பார்க்கலாம். பெண்களையும் போருக்கு உரிய வயது வராத சிறுவ சிறுமிகளை போரில் உபயோகப்படுத்தும் ஒரு பழங்குடி இனத்தை காட்டுங்கள் பார்க்கலாம்.
இந்தியாவில் எந்த போரிலும் சிறுவர்கள் உபயோகப்படுத்தப்பட்டது கிடையாது.
காபாலிகர்களோ, அல்லது வீர சைவர்களோ ஆயுதங்களை வைத்திருந்தவர்களாக இருக்கலாம். ஆயுதங்களை வைத்திருப்பது பெரிய விஷயம் அல்ல. எல்லா நாட்டு ராணுவங்களும் ஆயுதங்களைத்தான் வைத்திருக்கின்றன. ஆயுதம் வைத்திருப்பவன் தீவிரவாதியும் அல்ல. அப்படி யாரும் சொல்லவும் இல்லை.
சிறுவர் புலிகள் இயக்கத்தில் இருந்திருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, கட்டாயப்படுத்தி சேர்க்கவும் பட்டார்கள் என்பதே உண்மை. கடந்தகாலத்திலேயே ஈழத்தவர் மத்தியிலேயே இந்த குற்றச்சாட்டு பலமாக எழுந்திருக்கிறது. அந்த குற்றத்தை புலிகள் செய்திருந்தாலும் சரி, சிங்களவர் செய்திருந்தாலும் சரி, தவறு தவறுதான். அதனை எக்காரணம் கொண்டும் சரி என்று சொல்ல முடியாது. அவன் செய்தான் அவனை திட்டாமல் என்னை மட்டும் திட்டுகிறாயே என்பது சரியான அணுகுமுறை அல்ல.
தற்கொலை தாக்குதல் என்பது ஒரு விமர்சனம் அல்ல. சொல்லப்போனால், போருக்கு போகும் ஒவ்வொருவனும் தற்கொலை தாக்குதலுக்குத்தான் போகிறான். ஆனால், புலிகளின் மீதான குற்றச்சாட்டு, போர் இல்லாத இடத்தில், போரிடம் என்று அறிவிக்கபப்டாத இடத்தில், அங்கு இருக்கும் அப்பாவி பொதுமக்களது உயிர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், தற்கொலை தாக்குதல் நடத்துவதுதான். அது மட்டுமல்ல,நீலன் திருச்செல்வம் போன்ற ஆயுதத்தையே எடுக்காதவன் மீதும் தற்கொலை தாக்குதல் நடத்துவதும், சுட்டுக்கொல்வதும் தான்.
ஆயுதம் ஏந்தாதவனை தாக்கக்கூடாது என்பது இந்தியாவின் மரபு மட்டுமல்ல, உலகப் பொது மரபு. அதனால்தான் ஆயுதங்களை கீழே போட்டுவிட்ட எதிரி நாட்டு போர்வீரர்களை கூட கொல்லக்கூடாது என்பது ஐக்கிய நாடுகள் சபையின் விதி. ஜெனிவா கன்வென்ஷன் என்று பின்னாளில் கொண்டுவரப்பட்டதற்கு நீண்ட உலக பாரம்பரியம் உண்டு. இந்த விதியை ஆரம்பகாலம் கொண்டே மீறி வந்தவர்கள் புலிகள். தனக்கு எதிரி என்று தோன்றிவிட்டால், யாராக இருந்தாலும், ஆயுதம் ஏந்தாவனாக இருந்தாலும், பொதுமக்கள் அருகே இருந்தாலும் கண்டுகொள்ளாமல் கொலை செய்தவர்கள் புலிகள்.
அடுத்து மக்களை கூட்டிக்கொண்டு சென்ற புலிகளைப் பற்றி நீங்கள் சொல்லும் சால்ஜாப்பை பார்ப்போம்.

மக்கள் தானாக இடம் பெயர்ந்திருந்தால், புலிகளோடு கூட சென்றிருந்தால் பிரச்னை இல்லை. ஆனால், வெருட்டி அவர்களோடு கொண்டு செல்லப்பட்டார்கள். யாழ்ப்பாணத்தை சிங்கள ராணுவம் கைப்பற்றியபோது யாழ்ப்பாண மக்கள் அனைவரும் வெருட்டப்பட்டு புலிகள் வன்னிக்குக் கூட்டி சென்றார்கள். ஜாதிவாரியாக பிரிக்கப்பட்டு தனித்தனியாக வைக்கப்பட்டார்கள். பிறகு வன்னியில் இருங்கள் என்று சொல்லியும் சில வருடங்களுக்கு பின்னர் வெள்ளைக்கொடியை நீட்டிக்கொண்டு யாழ்ப்பாண மக்கள் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார்கள்.

இதேதான் வன்னி நிலப்பரப்பிலும் நடந்தது. மக்கள் அவர்களாக விரும்பி சென்றிருந்தால் பிரச்னை இல்லை. அங்கிருக்கும் மக்கள் அனைவரும் புலிகள் ஏமாந்த காலத்தில் தப்பி ஓடி வந்தார்கள். கூட்டம் கூட்டமாக. ஓடும் மக்களை புலிகள் சுட்டதை அந்த மக்களே ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். இதுதான் போர் மரபா? அல்லது மக்களை காப்பாற்றும் முறையா?

நொச்சிப்போர் நடக்கிற போது, மக்களை ஒதுங்கச் சொல்லித் தான் நொச்சிப் படைத்தலைவர்கள் கேட்பார்கள என்று சொல்லியிருக்கிறீர்கள். எந்த ஒரு இடத்திலாவது புலிகள் மக்களை தங்களுடன் வரவேண்டாம் என்று சொன்னதை ஆவணப்படுத்தியிருக்கிறார்களா? காட்டமுடியுமா? தங்களுடன் கூட்டிக்கொண்டுவந்ததைதானே நியாயப்படுத்தியிருக்கிறார்கள்.

"எதிரி அறநெறியோடு போரிடுவான், உலகம் ஈர நெஞ்சு கொண்டு உள் நுழைந்து இந்தப் போரை நிறுத்தும், சென்னையில் இருக்கும் கிழவர் ஏதேனும் செய்வார், தில்லியில் இருக்கும் முட்டாள்களுக்குக் கொஞ்சமாவது விளங்கும் அல்லது ஏதோ ஒரு ”அற்புதம்” நடந்து இந்திய ஆட்சி மாறும், முடிவில் நல்லூர்க் கந்தன் எப்படியாவது காப்பாற்றிவிடுவான்” என்று அவர்கள் நம்பிக்கொண்டிருந்ததாக சொல்லுகிறீர்கள்!

எதிரி அறநெறியோடுபோரிடுவான் என்று புலிகள் எதிர்பார்க்கவேண்டும் என்றால் அவர்கள் அறநெறியுடன் முதலில் போரிடவேண்டும். எந்த இடத்தில் அவர்கள் படுதோல்வியை அடைந்தார்களோ அதே இடத்தில்தான் பல வருடங்களுக்கு முன்னர் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைந்த இலங்கை போலீஸார் 1000 பேரை பாயிண்ட் பிளாங்கில் சுட்டுக்கொன்றார்கள். ஜெனீவா கன்வென்ஷனை காற்றில் பறக்கவிட்டார்கள். இது போல எத்தனை எத்தனையோ அறநெறியற்ற கொலைகளை செய்தார்கள். அப்படி அறநெறியற்று போர் புரிந்த பின்னால், எந்த முகத்தை வைத்துக்கொண்டு எதிரி அறநெறியுடன் போரிடுவான் என்று எதிர்பார்க்க முடியும்?

உலகம் ஈர நெஞ்சு கொண்டு இந்த போரை நிறுத்தும் என்று ஏன் அவர்கள் எதிர்பார்த்தார்கள்? சமாதானம் வேண்டாம் தலைவா போருக்கு ஆணையிடு என்று பள்ளிப்பிள்ளைகளை வைத்து ஊர்வலம் போனார்கள் புலிகள். அப்படி போரை விரும்பியவர்கள் ஏன் போரை நிறுததவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்?
கிழவர் என்ன செய்யவேண்டும்? தன்னை கொன்று வைகோவை உட்காரவைக்க முயன்றார்கள் என்பதால்தானே வைகோவை துரத்தி புலிகளிடமிருந்து விலகினார். அப்படி தன்னை கொல்ல வந்தவன் மீதும் கருணை வைக்க அவர் என்ன காந்தியா? காந்தியை எதிர்த்து அரசியலை ஆரம்பித்தவ்ராயிற்றே அவர்?
நல்லூர் கந்தன் அறத்தின் பக்கமே நிற்பான். அவனுக்கு தமிழர்கள் சிங்களவர்கள் வெள்ளைக்காரர்கள் இந்தி பேசுபவர்கள் என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது.